இந்திய மக்கள் அனைவருக்கும் இணைய வர்த்தகச் சேவையை வழங்கும் பொருட்டு, ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ஓஎன்டிசி) என்ற தளம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்த தளத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த தளம் இதுவரை பரிசோதனை கட்டத்தில் இருந்தது. தற்போது, பெங்களூருவைச் சேர்ந்த 16 பகுதிகளில், இந்த தளத்தின் உபயோகம் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், மளிகை கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து பொதுமக்கள் ஓஎன்டிசி வாயிலாக ஆர்டர் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதிவு செய்துள்ள விற்பனையாளர்களிடம் இருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியும். முதற்கட்டமாக, பேடிஎம், மைஸ்டோர், ஸ்பைஸ்மனி போன்ற விற்பனைத் தளங்கள் ஓஎன்டிசியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டன்சோ, லோட் ஷேர், ஷிப் ராக்கெட் போன்ற நிறுவனங்கள் மூலம், பொருட்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, NSDL eGov என்று அழைக்கப்பட்ட Protean eGov நிறுவனம், ஓஎன்டிசி தளத்திற்கான பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎப்சி வங்கி, கோட்டக் வங்கி ஆகியவை விரைவில் ஓஎன்டிசி செயல்பாடுகளில் இணையும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், வரும் வாரங்களில், இன்னும் சில விற்பனையாளர்களும் ஓஎன்டிசியில் இணைய உள்ளதால், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் எளிதாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கூடுதல் பொறுப்புச் செயலாளர் அணில் அகர்வால், "ஓஎன்டிசி தளத்திற்கு இது பெருமைமிகு தருணம் ஆகும். ஜனநாயக ரீதியாக, அனைவருக்குமான இணைய வர்த்தகத் தளமாக இதை உருவாக்கியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த தளத்திற்கான முதல் கட்ட பரிசோதனை நடந்து முடிந்திருக்கிறது. தற்போது, இரண்டாம் கட்டமாக, பெங்களூரு பொதுமக்களுக்கு இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், இந்த தளத்தைப் பயன்படுத்தி, அவர்களது கருத்துக்களை கூற வேண்டுகிறோம். இதனால், ஓஎன்டிசி தளத்தை இந்தியாவின் பிற நகரங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்னர், ஏதேனும் குறைகள் இருந்தால், அவை சரி செய்யப்படும்" என்று கூறினார்.