அரபிக்கடலில் பிபர்ஜாய் என்ற அதிதீவிர புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் கடந்த ஜூன் 6ஆம் தேதி உருவானது. மேலும், ஜூன் 15ஆம் தேதி கரையை கடக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம், 10 நாட்கள் கடலில் நீடித்த முதல் புயல் என்ற பெருமையை இது பெறுகிறது. மேலும், இதனால், புயலின் தீவிரம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், இதற்கு முன்னர், வாயு புயல் 9 நாட்களும், பானி புயல் 7 நாட்களும், ஒக்கி புயல் 7 நாட்களும் கடலில் நீடித்து நின்றன. அந்த வகையில், பிபர்ஜாய் புயல் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. எனவே, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்-தயாரிப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பிபர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரம் - கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 40 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என கூறப்படுகிறது. அத்துடன், புயல் கரையை கடக்கும் வேளையில், காற்றின் வேகம் மணிக்கு 135 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கட்ச் வளைகுடா பகுதியில், கடற்கரையில் இருந்து 5 முதல் 10 கிலோமீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.














