அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை அதிபர் ஜோ பிடென் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பரவலாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் தங்கி இருக்கும் அகதிகள் அமெரிக்கர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலமாக நாட்டின் முழு குடியுரிமை பெற முடியும். அப்படி விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும். அதே சமயத்தில் ஜூன் 17 க்கு பிறகு அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மூன்று ஆண்டுகளில் அவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக பணி உரிமம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் பேருக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க தேர்தலில் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் அகதிகள் விவகாரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.














