ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்தோ -பசிபிக் பெருங்கடலில் இந்த இரு நாடுகளுக்கும் சீனா நெருக்கடி அளிக்கிறது. அதையடுத்து இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ். ஜப்பான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டத்தை வாஷிங்டனில் பைடன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்க்மான்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை அவர் வரவேற்றார்.
கிழக்கு சீன கடலில் சென்காகு தீவுகளை சீனா உரிமை கோருவதால் ஜப்பானுடன் மோதல் நிலவுகிறது. அதேபோல் தென் சீன கடலில் பிலிபைன்சுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, எதிர்காலத்தில் சுதந்திரமான, பாதுகாப்பானஇந்தோ -பசிபிக் பிராந்தியம் உருவாக முயற்சிகள் நடந்து வருகிறது. தொழில்நுட்பம், கடல் சார் பாதுகாப்பு, பசுமை எரிவாயு போன்ற முக்கிய துறைகளில் இந்த மூன்று நாடுகள் இடையே உறவுகள் மேம்படுத்தப்படும். பிலிப்பைன்ஸ் உடன் புதிய பொருளாதார வழிதடம் உருவாக்கப்பட உள்ளது. ஜி 7 கூட்டமைப்பின் கீழ் இது உருவாக்கப்படுகிறது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இதுபோன்று அமைவது இதுவே முதல் முறையாகும். இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அமெரிக்கா இரும்புக் கவசம் போல் செயல்பட்டு பாதுகாப்பு அளிக்கும் என்றார் அவர். இதற்கிடையே இந்த கூட்டத்திற்கு சீன வெளியூரவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.