டிரம்ப் அரசு H-1B விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தியுள்ளது. மைக்ரோசாப்ட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (சுமார் ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு நாளை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும், அடுத்த 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்றும், நீட்டிப்பு குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், H-1B விசா வைத்துள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசா கட்டண உயர்வால் வெளிநாட்டு ஊழியர்கள் இப்போதைக்கு அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியர்கள். ஆதலால், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் நிலையில் உள்ளது.