காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கன் தலைமையிலான குழு கடந்த திங்களன்று பிராந்திய நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. இது காசா போரை முடிவுக்கு கொண்டு வர தூதரகரீதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். காசா போர் தொடங்கிய பின் பிளிங்கன் இப்பகுதியில் மேற்கொள்ளும் ஐந்தாவது சுற்றுப்பயணம் இது. கடந்த திங்களன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாதை வந்தடைந்தார் பிளிங்கன். அங்கு அவர் இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து எகிப்து வந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் அப்துல் பட்டா அல் சிசியை கெய்ரோவில் செவ்வாய் அன்று நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது காசாவில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வது, ஹமாஸ் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்வது போன்றவற்றிற்கான ஒப்பந்தத்தை உருவாக்க பிளிங்கன் குழு முயற்சிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றியடைந்தால் தனி பாலஸ்தீன தேசம் அமைப்பது குறித்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இதுவரை காசா போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,585 ஆக அதிகரித்துள்ளது.














