ஆன்லைன் மளிகைக் கடையான பளிங்கிட் (Blinkit), கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகரில் அதனுடைய முதல் ‘அமைதியான’ அங்காடியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனை இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.
இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் காதுகேளாத, பேச முடியாத 20 சிறப்புத் திறனாளிகளால் நடத்தப்படுகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதன் அமைப்புகளை மேலும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்கான முயற்சியாகும். பளிங்கிட் நிறுவனம் இந்த அங்காடியைத் தொடங்க டாக்டர் ரெட்டியின் அறக்கட்டளை மற்றும் சார்தக் கல்வி அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாயன்று ஒரு வலைப்பதிவில், "பணியாட்கள் ஒவ்வொருவரும் கூட்டுப் பணி என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய செயல்பாடுகளில் முன்மாதிரியாக இருக்கிறார்கள். எங்கள் இந்த முதல்-வகை முயற்சியானது, சிறப்புத் திறன் கொண்ட சமூகத்திற்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளது.
Blinkit நிறுவனம் முன்பு கிராபர்ஸ் (Grofers) என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 25 நகரங்களில் 400 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.