உலகில் மிகவும் தூய்மையான பொருளாக கருதப்படும் தாய்ப்பாலில், பூச்சி மருந்து கலந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 111 பச்சிளம் குழந்தைகள் எந்த காரணமும் இன்றி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில், பூச்சிகொல்லி மருந்து கலந்ததன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ குயின்மேரி மருத்துவமனை நடத்திய இந்த ஆய்வில், சைவ உணவு மற்றும் அசைவ உணவு சாப்பிடும் 130 கர்ப்பிணிகள் கண்காணிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டனர். இதில், சைவ உணவு சாப்பிடும் பெண்களை விட அசைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் 3 மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சைவ உணவுகளில் ரசாயன உரங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்கின்றன. இதுவே, கால்நடைகளுக்கு ஊசி மூலம் ரசாயன மருந்துகள் செலுத்தப்படுவதால் இறைச்சியில் பூச்சிக்கொல்லி கலக்கிறது. இந்த ஆய்வறிக்கை, தற்போது, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.














