3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை செய்ததற்கான புதிய ஆதாரம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிமு 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்த 2 சகோதரர்களின் கல்லறையை ஆராய்ச்சி செய்த போது இந்த தகவல் கிடைத்துள்ளது. இறந்த சகோதரர்களில் ஒருவருக்கு இறப்பதற்கு சற்று முன்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அவருக்கு வலிப்பு நோய் அல்லது மரபு ரீதியிலான பிரச்சனைகள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த டெல் மேகிடோ நகரம் வெண்கல காலத்தில் (கிமு 1550 முதல் கிமு 1450 வரை) வணிக ரீதியிலான செல்வாக்கு உள்ள நகரமாக இருந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியில் கிடைத்துள்ள மண்டை ஓட்டு அறுவை சிகிச்சைக்கான ஆதாரம், வெண்கல காலத்தில் இருந்த வணிக நடைமுறை, மருத்துவம் சார்ந்த அறிவு, உலகின் பிற பகுதிகளுடன் இருந்த கலாச்சாரப் பிணைப்பு போன்றவற்றை அறிய பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.