அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த சையது மசாகிர் அலி என்பவர் படித்து வருகிறார். இந்த நிலையில், அங்குள்ள கொள்ளையர்களால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உதவிக்காக கெஞ்சும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவரை உடனடியாக சந்திக்க அவரது குடும்பத்தினர் அவசர விசா கோரி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான சிசிடிவி வீடியோ காட்சியில், மாணவரின் வீட்டின் அருகில் அவரை 3 பேர் தாக்குகின்றனர். ரத்த காயம் ஏற்பட்ட அவர் ஓடுகிறார். இரண்டாவது காணொளியில், மாணவர் உதவி கேட்கிறார். அதில், அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த வழியில் 4 பேர் அவரை தாக்கியதாகவும், தயவு செய்து உதவும் படியும் சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிகழாண்டில் இதுவரை 4 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














