நீலகிரி மாவட்டத்திற்கான மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு குறைந்த கட்டணத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் வாயிலாக போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கிராம பகுதிகளுக்கு தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மேலும் பெண்கள், பள்ளி மாணவ- மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழைய பேருந்துகளை புதுப்பித்தல், பேருந்து வழித்தடங்களை திறந்து வைத்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல்,பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்திட 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அவை தவிர நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யுமா வகையில் 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பி. எஸ்-6 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர். மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மீதமுள்ளவை அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.