மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி முதலீட்டு பரிந்துரைகளை வழங்குவது போல காணொளி வெளியாகி உள்ளது. இது டீப் பேக் தொழில்நுட்பத்தில் போலியாக உருவாக்கப்பட்ட காணொளி என்று மும்பை பங்குச் சந்தை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்குச்சந்தையில், நூதன வழியில் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பங்கு முதலீடுகளை பரிந்துரை செய்வது போல காணொளிகள் அதிகமாக பகிரப்படுகின்றன. இதனை நம்பி முதலீடு செய்யும் பொழுது நஷ்டம் ஏற்படுகிறது. இடையில் ஏதோ ஒரு கும்பல் பயன்பெறுகிறது. எனவே, இது போன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் என மும்பை பங்குச் சந்தை எச்சரித்துள்ளது. ஏற்கனவே, தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி பரிந்துரை வழங்குவது போன்ற டீப் ஃபேக் வீடியோ சர்ச்சைக்கு உள்ளானது. அந்த வரிசையில், சுந்தரராமன் ராமமூர்த்தி பரிந்துரை செய்வது போன்ற காணொளியும் போலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.