கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இந்த சாதனைப் பதிவாகியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இதனை உறுதிப்படுத்தினார். செல்போன் சேவை வருவாய் 15%, வீட்டு பைபர் சேவை 18%, குத்தகை சேவை வருவாய் 14% உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளில் எபிடா ரூ.1,100 கோடியில் இருந்து ரூ.2,100 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இழப்புகள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் டிசம்பரில் 9 கோடியாக உயர்ந்துள்ளனர். நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கி வருகிறது. 1 லட்சம் டவர்கள் அமைக்கும் திட்டத்தில் 75,000 டவர்கள் பொருத்தப்பட்டு, 60,000 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஜூன் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார்.