பிரபல கல்வி நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவிந்திரனின் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு பரிவர்த்தனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைஜு ரவீந்திரனின் திங் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 3 அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2011 முதல் 2023 வரை, 28000 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீடுகள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளன. அதே சமயத்தில், 9754 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடாக, நேரடியாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விளம்பரங்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்கள் 944 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான ஆவணங்கள் நிறுவனத்தின் சார்பில் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. எனவே, வெளிப்படைத்தன்மை வேண்டி இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.