கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பைஜூஸ் நிறுவனத்தில், உடனடி பணி நீக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைபேசி அழைப்புகள் மூலமாகவே பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். நோட்டீஸ் பீரியட் எதுவும் இன்றி, உடனடியாக அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பள பணம் முழுதாக வழங்கப்படவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
பொதுவாக, செயல்திறன் அடிப்படையில் நீக்கப்படும் ஊழியர்களை, செயல்திறனை மேம்படுத்தும் பயிற்சியில் தக்க வைப்பது வழக்கம். ஆனால் பைஜூஸ் நிறுவனம் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல், உடனடி பணி நீக்கங்களை செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 100 முதல் 500 ஊழியர்கள் இதுபோல நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளின் பகுதியாக இந்த பணி நீக்கம் நிகழ்த்தப்படுவதாக சொல்லப்படுகிறது.