முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசின் 2023 - 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வரும் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. பட்ஜெட் தயாரிப்பில் நிதித்துறையும், வேளாண் துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை 5:00 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். இக்கூட்டத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதித்து அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
மேலும் புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வருவது, வெளி மாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவை குறித்தும் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.