கனடா நாடு, 2022 ஆம் ஆண்டில், 4.8 மில்லியன் விசா விண்ணப்பங்களை செயல்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு விசா வழங்கல் உடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் இரண்டு மடங்கு கூடுதல் விசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகள் இதனை உறுதி செய்துள்ளன.
கனடா, நவம்பர் மாதத்தில் மட்டும் 260,000 வருகை விசாக்களை வழங்கி உள்ளது. அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் சீன் பிரேசர், "கனடா அரசு பெருந்தொற்று காலத்தில் நிலவிய சரிவை களைந்துள்ளது. இந்த வருடம் வரலாற்று உச்ச எண்ணிக்கையில் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 670,000 கல்வி விசாக்களும், 700,000 பணி விசாக்களும், எண்ணற்ற வருகை விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், கனடாவில் புதிதாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில், 405,000 என்ற எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது எங்கள் 431,000 என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் மிக அருகில் உள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.