காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக, கனடா தெரிவித்துள்ளது.குர்பத்வந்த் சிங் பன்னுன், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வீடியோ வழியாக பகிரங்க மிரட்டலை விடுத்திருந்தார். “நவம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர் சீக்கியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம். ஏனென்றால் உங்கள் உயிருக்கு பாதிப்பு நேரலாம். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் ஷாஹித் சத்வந்த் சிங் காலிஸ்தான் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.” இவ்வாறு அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும் நவம்பர் 19ஆம் தேதி குறித்து அவர் இவ்வாறு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இது இந்திய அளவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே, கனடாவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் மிகுந்த பாதுகாப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கனடா சார்பில், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 1985 ஆம் ஆண்டு, 330 பேர் பலியான ஏர் இந்தியா விமான தாக்குதலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.














