கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத்தீ காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள், அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுக்கடங்காத நிலையை எட்டி உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்பதாலும், அதிக காற்று வீசக்கூடும் என்பதாலும், காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சவால் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அப்பகுதியில் உள்ள மக்களை அவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், “நகரம் உடனடி அபாயத்தில் இல்லை. எனினும், நகரவாசிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளனர். இத்துடன் சேர்த்து, அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீயை கனடா இவ்வருடம் எதிர்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் மொத்த எண்ணிக்கை 1046 ஆக சொல்லப்பட்டுள்ளது.