வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை கேண்டிடேட் செஸ் போட்டி நடைபெற உள்ளது.
கேண்டிடேட் செஸ் போட்டி 2024 கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் எட்டு பேரும், பெண்கள் பிரிவில் எட்டு பேரும் விளையாட உள்ளனர். இதில் சேம்பியன் பட்டம் பெறும் வீரர் வீராங்கனைகள் உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்ள உள்ளனர். நடப்பு உலக செஸ் சாம்பியன் ஆக சீனாவை சேர்ந்த டிங் லிரன் மற்றும் பெண்கள் பிரிவில் ஜூ வென் ஜூன் ஆகியோர் உள்ளனர். தற்போது கனடாவில் நடைபெற உள்ள இந்த கேண்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த டி. குகேஷ் தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா,ஆர். வைஷாலி ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது 17 வயதான குகேஷும் இணைந்துள்ளார். இவர் பிடே சர்க்யூட் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலம் இப்போட்டிக்கு தகுதி அடைந்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்றிருந்தார். இதேபோன்று பெண்கள் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த ஹம்பியும் அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்














