மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து சீட்டுகளில் இனி மருந்துகளின் பெயர்களை கேப்பிடல் எழுத்துக்கள் எனும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை என்று பொதுமக்களும், மருந்தாளுநர்களும் கூறு வந்தனர். மேலும் மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதால் மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதித்தரும்பொழுது அவற்றை பிரித்து அறிய முடியாத சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சில நோயாளிகள் தவறான மருந்து உட்கொண்டதால் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. மேலும் இது தொடர்பான புகார்கள் கடந்த சில வருடங்களாக தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் புரியும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அதற்காக நடவடிக்கைகள் எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இனி நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயரை எழுதி தர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தாங்கள் எழுதித் தரும் மருந்து சீட்டில் இடம் பெறும் மருந்துகளின் பெயர்களை நோயாளிகளுக்கு புரியும் வகையில் தெளிவாக கேப்பிட்டல் எழுத்துக்களில் எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.