காவிரி நதிநீர் விவகாரம் குறித்த வழக்கினை சுப்ரீம் கோர்ட் வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு ஏமாற்றியதை அடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவானது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை தொடங்கியது.
இதனை பி.ஆர்.கவாய், பி.எஸ்.பி நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் விசாரிக்க நியமிக்கபட்டிருந்தனர். அதன்படி கடந்த 28ஆம் தேதி தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் தமிழக அரசு கர்நாடக அரசு 15ஆயிரம் கன அடி நீரை திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விவாதித்தது. ஆனால் கர்நாடகா அரசு இதனை மறுத்தது. இரு தரப்பு விவாதங்களின் முடிவில் நீதிபதிகள் நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 5ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று விசாரணை நடைபெற இருந்தது. இந்த மனுவை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இல்லாத நிலையில் இந்த வழக்கு 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தீர்வு காண வேண்டுமெனில் சுப்ரீம் கோர்ட் தனி நீதிபதியை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கை தள்ளி வைத்ததால் தமிழக விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பின்பு விசாரணை நடத்தப்படும் எனில் பயிர்கள் முற்றிலும் அழிந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.