இணையதளம் வாயிலாக தங்கும் விடுதிகள் மற்றும் பிற சுற்றுலா வசதிகளை ஓயோ, மேக் மை ட்ரிப், கோஐபிபோ போன்ற நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. இந்த நிறுவனங்கள், சந்தையில் நிலவும் போட்டி நிலவரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, இந்த நிறுவனங்களின் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்காக காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா 47 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
சந்தையில், இந்த நிறுவனங்கள் தவறான நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சி சி ஐ இந்த நிறுவனங்களை கண்காணித்து வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக, நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி வந்துள்ளது. இறுதியாக, தற்போது, மேக் மை ட்ரிப் நிறுவனத்திற்கு 27 மில்லியன் டாலர்களும்,ஓயோ நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர்களும் அபராதம் விதித்துள்ளது.
ஓயோ மற்றும் மேக் மை ட்ரிப் ஆகிய நிறுவனங்கள், சக போட்டி நிறுவனங்களான ஃபேப் ஹோட்டல்ஸ் (Fab Hotels), ட்ரீபோ (Treebo) ஆகியவற்றை வணிகம் செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவதால், பிற நிறுவனங்களின் வளர்ச்சி தடைபடுவதாகவும் தகவல் வெளிவந்தது. அத்துடன், ஹோட்டல் நிர்வாகிகளிடம், தங்களது இணையதளத்தை தவிர பிற இணையதளங்கள் மூலமாக வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது போன்ற நியாயமற்ற ஒப்பந்தங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேக் மை ட்ரிப் மற்றும் ஓயோ நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளன.