மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினிஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தினார்கள்.