2023-24 ஆம் நிதியாண்டில், வரலாற்று உச்சமாக இந்தியா சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் பெறும் என்று பொருளாதார நிபுணர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கடன் குறித்த திட்டங்களே பட்ஜெட்டில் முதன்மையாக இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில், பொருளாதார மந்த நிலை தீவிரமாக உணரப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, கடன் பெறும் தொகையை குறைக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் இறங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அத்துடன், 2024 ஆம் ஆண்டு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு ஆளும் கட்சிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வல்லுனர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளின் படி, இந்தியாவின் கடன் தொகை 14.8 முதல் 17.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுவே, கடந்த 2014 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தொடங்கப்பட்டபோது, 5.92 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த கருத்துக்கணிப்பில், நிகழாண்டில் உணவு மற்றும் உரங்களுக்கான மானியங்களை அரசு ரத்து செய்யும் என கூறப்பட்டுள்ளது.