தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பெய்து வருகிறது.
கடந்த வாரத்தில் தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வட கிழக்கு பருவ மழையின் காரணமாக கன மழை பெய்து வெள்ளக்காடாக மாறியது. இப்போது வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் 31 ஆம் தேதி மற்றும் 1ம் தேதி நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1 மற்றும் 2ம் தேதியில் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் இது இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி வரை இந்த மேல அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.