தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ந்தேதி தாமதமாக தொடங்கியது. ஆனால் 25 நாட்களில் நாடு முழுவதும் பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது. கடந்த 24 ஆண்டுகளில் 3-வது முறையாக ஜூலை 2-ந்தேதி நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.