அரிசி ஏற்றுமதியை பொறுத்தவரை, சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 40% க்கும் கூடுதலான சர்வதேச அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால், பல்வேறு உலக நாடுகளில் பணவீக்கம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பெருமளவு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ விளைவு மற்றும் பருவமழை தவறியது போன்ற காரணங்களால் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உள்நாட்டு உணவு தேவையை கருத்தில் கொண்டு, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் உள்ள பல நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி அரிசியை சார்ந்து உள்ளன. எனவே, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால், அந்த நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட உள்ளது. அதன் விளைவாக, அரிசி விலை பன்மடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, இறுதியில், சர்வதேச அளவில் பணவீக்கம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.














