கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு கட்டங்களாக விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று மதியம் பூமியின் நான்காவது சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை பகிர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நிகழ்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை, கடந்த சனிக்கிழமை, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முறையே 3 முறை உயர்த்தப்பட்டது. திட்டமிட்டபடி இவை வெற்றிகரமாக அமைந்த நிலையில், இன்று நிகழ்ந்த நான்காம் சுற்றுவட்ட பாதை உயர்வும் வெற்றியடைந்துள்ளது. மேலும், விண்கலத்தை ஐந்தாவது சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தும் பணி வரும் 25 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.