ஓபன் ஏஐ நிறுவனம், சாட் ஜிபிடி என்ற பெயரில், செயற்கை நுண்ணறிவு சாட் பாட் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இது உலகின் போக்கையே வேறு திசைக்கு மாற்றுவதாக அமைந்தது. இந்நிலையில், கணினியில் மட்டுமே செயல்பட்டு வந்த சாட்ஜிபிடி, ஆப்பிள் ஐபோன்களின் இயங்குதளமான ஐஓஎஸ் ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில், அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி, விரைவில் பிற நாடுகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, வெகுவிரைவில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் மற்ற கைபேசிகளில், இந்த செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ,செயலிக்கு சந்தா கட்டணம் அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் செயலியை தரவிறக்கம் செய்து இலவசமாக பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், சாட் ஜிபிடி 4 இல் உள்ள சிறப்பு அம்சங்கள் ஏற்கனவே சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் தங்கள் பல்வேறு சாதனங்களில் சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, அவர்களின் பயன்பாட்டு விவரங்களை 'சிங்' செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.