சத்தீஸ்கர் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், மாநில அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், இவ்வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நேற்று முன்தினம் மாற்றப்பட்டது, இதற்கான தொடக்கம் என கூறப்படுகிறது. அதே வேளையில், மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிரேம்சாய் சிங் தேகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், காங்கிரஸ் கமிட்டி உத்தரவின் அடிப்படையிலேயே பதவியை விட்டு விலகியதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மோகன் மார்க்கம் அமைச்சராக பதவி ஏற்பார் எனவும், மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்பி தீபக் பைஜ் தலைமை தாங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














