சென்னை குடிநீர் வாரியத்தில் மறுவரையறை மாற்றங்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், வார்டுகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள்படி சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சென்னை குடிநீர் வாரியமும் பணிமனை எல்லைகளை சீரமைத்து மறுவரையறை மாற்றங்களை அக்டோபர்1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. எனவே, நுகர்வோர் எவ்வித குழப்பமும் இன்றி தங்கள் பகுதிக்குரிய பணிமனைகளை அணுகி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய களப்பணியாற்றும் அலுவலர்கள் சிறந்த முறையில் பணிகளை கண்காணிக்கவும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடியும்.
நுகர்வோர் தங்கள் நுகர்வோர் அட்டை எண்களின் விவரங்களை வைத்து, திருத்திய பணிமனை விவரங்களை சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் (https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login) சரிபார்த்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.