குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய எட்டு வட்டாரங்கள் உட்பட 359 ஊராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதன்படி அங்கு பாதுகாப்பு குழு அமைக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு குழுவில் கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறையினர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த குழுவினர், 0 முதல் 18 வயது குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். மேலும், இருளர் இன குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகள், தனியார் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகள் உதவி எண் 1098, கல்வி உதவிக்கு 14417 ஆகிய எண்களை அனைத்து பள்ளிகளிலும் எழுத முதன்மை கல்வித் துறைக்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.