சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை அதி கன மழை பதிவாகியுள்ளது. வெறும் 40 மணி நேரத்தில், வழக்கமான ஜூலை மாத சராசரி மழை அளவு, ஒட்டுமொத்தமாக கொட்டித் தீர்த்துள்ளது. இது பெய்ஜிங் நகரின் கடந்த 140 ஆண்டு கால வரலாற்றில் பதிவான அதி கனமழை என கூறப்பட்டுள்ளது.
டோக்சூரி சூறாவளிப் புயல் காரணமாக, இந்த மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புயலின் போது பதிவான சராசரி மழை அளவு 744.8 மில்லி மீட்டர் என பெய்ஜிங் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.