உலகில் முதல் முறையாக வாய் வழியாக உறிஞ்சும் வகையில், புதிய கொரோனா மருந்தை சீனா செலுத்த தொடங்கியுள்ளது. Cansino Biologics Inc என்ற நிறுவனம் இந்த கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதற்கு சீனாவின் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடினோ வைரஸுக்கு எதிராக கொடுக்கப்படும் தடுப்பு மருந்தைப் போலவே, இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வகப் பரிசோதனைகள், சீனா, ஹங்கேரி, பாகிஸ்தான், மலேசியா, அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சீனாவின் பொது மக்களுக்கு இது செலுத்தப்படுகிறது.
உலக சுகாதார மையத்தின் தரவுகளின் படி, ஊசி போன்று அல்லாமல், வாய் வழியாகவோ மூக்கு வழியாகவோ எடுத்துக் கொள்ளும் வகையில், சுமார் 12 கொரோனா தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்துகள், சர்வதேச அளவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செலுத்தப்படவில்லை. எனவே, சீனாவின் இந்த மருந்து உலகின் முதல் ஊசி அல்லாத தடுப்பு மருந்தாக போடப்படுகிறது. சீன மக்களுக்கு இந்த கொரோனா மருந்து கொடுக்கப்படுவதை அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டுள்ளன.
காணொளியில், கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட பொதுமக்கள், தங்களது அனுபவத்தை பகிர்ந்து உள்ளனர். ஒருவர், அந்த மருந்து இனிப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மற்றொருவர், பால் சேர்க்கப்பட்ட தேநீர் அருந்துவது போல அதன் சுவை இருந்ததாக தெரிவித்தார். மேலும், 20 வினாடிகளுக்குள் இந்த மருந்து செலுத்தப்படுவதால் மகிழ்ச்சியாக உள்ளதாக மற்றொருவர் கூறினார். இதுகுறித்து பேசிய இந்தியாவின் எதிர்ப்பு சக்தி துறை நிபுணர் டாக்டர். வினிதா பால், “இந்த தடுப்பு மருந்து சிறியது முதல் பெரிய துளிகளாக உள்ளன. பெரிய துளிகள் வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் பாதுகாப்பு தரும். அதே வேளையில், சிறிய துளிகள், உடலின் பிற பாகங்களுக்கு சென்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும்” என்று கூறினார்.
சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவது கட்டாயம் இல்லை. ஆனால், அங்கு கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. அதனை தளர்த்தும் முன்னர் இந்த மருந்தை பூஸ்டர் மருந்து போல செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கு இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி இல்லா தடுப்பு மருந்து எளிமையாக போடப்படுவதால், ஏழை நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.














