செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், அதி நவீன சாட் பாட்கள் அறிமுகமாகி வருகின்றன. ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி என்ற செயலியையும், கூகுள் நிறுவனம் பார்ட் என்ற சாட்பாட் தளத்தையும் அறிமுகம் செய்துள்ளன. இந்நிலையில், சீனாவை சேர்ந்த பைது நிறுவனம், 'எர்னி பாட்' என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
Enhanced Representation through Knowledge Integration என்பதன் சுருக்கமாக எர்னி என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, பைது நிறுவனம் இந்த திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாட் பாட், மொழிகளை புரிந்து கொண்டு, மொழி மூலமாக பதிலளிக்க வல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வார்த்தைகளை புகைப்படங்களாக மாற்றி தரும் அம்சம் கொண்டது என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தனிப்பட்ட செயலியாக இது அறிமுகமாகும் எனவும், நாளடைவில் இது பைது தேடுபொறியுடன் இணைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களாக உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் பைது ஆகியவை ஒன்றுக்கொன்று போட்டியாக ஒரே நேரத்தில் தங்கள் புதிய சாட்பாட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.