சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம், சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு போட்டியாக புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது. மேலும், அமேசான் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கான சாட் தளங்கள் ஆகியவற்றுடன் இந்த தொழில்நுட்பத்தை இணைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், சீன சந்தையில், சாட் ஜிபிடிக்கு நிகரான போட்டியாக அலிபாபா களமிறங்கியுள்ளது.
இன்று பீஜிங்கில் நடைபெற்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப மாநாட்டில், இது குறித்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் சாங் வெளியிட்டுள்ளார். இதற்கு ‘டோங்யி க்யான்வென்’ என்று சீன மொழியில் பெயரிடப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் 'ஆயிரம் கேள்விகளில் உண்மை' என்பதாகும். சீனாவின் பிரபல பைது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்ட நிலையில், அலிபாபா களமிறங்கி உள்ளதால் சந்தை போட்டி வலுத்துள்ளது. அலிபாபா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், ஹாங்காங் பங்குச்சந்தையில் 3.8% வரை அலிபாபா பங்குகள் உயர்ந்துள்ளன. அதே வேளையில், பைது நிறுவனத்தின் பங்குகள் 6.4% சரிவை பதிவு செய்துள்ளன.