சீனாவை சேர்ந்த லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் வணிகப் பயன்பாட்டுக்கான ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்த மற்றொரு நிறுவனம் கிட்டத்தட்ட 10000 செயற்கைக் கோள்களை உள்ளடக்கிய கூட்டமைப்பை நிறுவ விண்ணப்பித்துள்ளது.
கடந்த மே 24ம் தேதி, Hongqing Technology என்ற சீன நிறுவனம் சர்வதேச தகவல் தொடர்பு ஒன்றியத்திடம் (ITU) விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், Honghu - 3 என்ற பெயரில் செயற்கைக்கோள் அமைப்பை நிறுவுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 160 சுற்று வட்ட பாதை நிலைகளில், 10000 செயற்கைக்கோள்களை அமைக்க திட்ட வரையறை இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் கூட்டமைப்பால் விண்வெளியில் ஏற்கனவே உள்ள செயற்கைக்கோள் இணைப்புகளுக்கு இடையூறுகள் அல்லது பாதிப்புகள் நேருமா என்பதை ஆராய்ந்த பிறகு இதற்கான அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. சீனா சார்பில் Guowang மற்றும் G60 Starlink ஆகிய 2 செயற்கைக்கோள் கூட்டமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Honghu - 3 க்கு அனுமதி கிடைத்தால், இது சீனா சார்பில் நிறுவப்படும் மூன்றாவது மிகப்பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்பாக இருக்கும்.