கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் வெளியூர் பயணிகள் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவி்லுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் ரயில்கள், பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் தற்போது விமான நிலையத்தை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளனர்.
இதையடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு 14 விமானங்கள், தூத்துக்குடிக்கு 8 ,கோவைக்கு 16, திருச்சிக்கு 8, கொச்சிக்கு 12, திருவனந்தபுரத்துக்கு 6 விமானங்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விமான பயண டிக்கெட் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடிக்கு தற்போது ரூ.14,500 வரையும், மதுரைக்கு 14,000, கோவைக்கு 13,500, திருச்சிக்கு 10,000, திருவனந்தபுரத்துக்கு 21,000 ஆகவும் விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.