ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று 3% உயர்ந்து ₹1,302.7 ஆக வர்த்தகமாகின. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், சிட்டி குழுமம் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. சிட்டி குழுமம் ரிலையன்ஸ் பங்குகளுக்கான இலக்கு விலையை ₹1,530 என உயர்த்தி நிர்ணயித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்திய சந்தை சராசரியுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் பங்குகள் 20% குறைவாகவே செயல்பட்டிருந்த நிலையில், இந்த புதிய தகவல் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனா போன்ற நாடுகளில் போட்டி குறைந்ததால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்புத்துறையில் லாபம் அதிகரித்துள்ளது. மேலும், ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வளர்ச்சியும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் காலங்களில் ஜியோ நிறுவனம் 5G சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் அதிக வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.