அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பல கட்சிகள் மதத்தின் பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முரளி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.














