முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று வகுப்புகள் தொடங்கியது. புதிய மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கலகலப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 7 முதல் 27 வரை நடத்தப்பட்டது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், சிறப்பு மற்றும் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று முடிந்தது. நிரம்பாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. புதிய மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிக்கு வருகை தந்தனர். சீனியர் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்ததோடு, நடனம், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. புதிய பருவத்தின் தொடக்கமாக இது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.