‘தூய்மை கங்கை' திட்டம், உலகின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் திட்டம் என்று ஐ. நா சபை இந்தியாவுக்கு விருது வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தால் கங்கை நதி மற்றும் கங்கை சமவெளி பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. டால்பின், ஆமைகள், மீன்கள் உள்ளிட்டகடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கங்கையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் தூய்மை கங்கை திட்டம் உலகின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் திட்டங்களில் ஒன்றாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 70 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 150 சுற்றுச்சூழல் திட்டங்கள் குறித்து ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அவற்றில் இருந்து உலகின் மிகச் சிறந்த 10 சுற்றுச்சூழல் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மாண்ட்ரியால் நகரில் அண்மையில் நடந்த 15-வது பருவநிலை மாற்றம் மாநாட்டில் இதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதனை தூய்மை கங்கை திட்டத்தின் தலைமை இயக்குநர் அசோக்குமார் பெற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.