கனமழையால் ஏற்பட்ட மேகவெடிப்பு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தி வீடுகள், ஓட்டல்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தின் தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்ததால் கீர் கங்கா நதி கரைபுரண்டு ஓடியது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தாராலி கிராமத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் புதைந்து காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுகி பகுதியிலும் மேகவெடிப்பால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் வெள்ளத்தில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களை தேடி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.