தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று சாலை மார்க்கமாக விழுப்புரம் செல்கிறார். கள ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு நாளை மாலை சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் உடனான இந்த சந்திப்பின் போது ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டபேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு ஆளுநர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.