கடற்கரை - சேப்பாக்கம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையை ரத்து செய்யத் திட்டமிருந்த நிலையில், தற்போது இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை செயல்படுத்துவதற்கு, சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையிலான பறக்கும் ரயில் சேவையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், கடற்கரை-சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டத்தை தள்ளிவைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் சேவை ரத்து தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. பெருநகரப்போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்து செயலருடன் ஆலோசித்து, ஒரு திட்டத்தை இறுதி செய்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














