சூரியனின் உண்மையான நிறம் வெள்ளை என்றும் பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டுமே அது மஞ்சள் நிறமாகத் தெரிகிறது என்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி கூறியுள்ளார். ட்விட்டரில் 'லேட்டஸ்ட் இன் ஸ்பேஸ்' என்ற பக்கத்தில், சூரியனின் நிறம் குறித்த உண்மைத் தகவல் கூறப்பட்டிருந்தது. அதனை, தான் உறுதி செய்வதாக ஸ்காட் கெல்லி ட்வீட் செய்திருந்தார். அதன் பிறகு, இது உலக அளவில் பேசு பொருளாகி உள்ளது.
சூரியனின் உண்மையான நிறம் வெள்ளை ஆகும். மேலும், சூரிய ஒளியில் அனைத்து நிறங்களும் இணைந்துள்ளன. சூரிய ஒளி பூமியை அடைந்த பின்னர், அதனை நமது கண்களால் பார்க்கும் பொழுது, பல்வேறு இயற்பியல் விளைவுகளின் காரணமாக நமக்கு அது மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. மேலும், சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் பொழுது, குறுகிய அலைவரிசையிலான நீல நிறம், நீண்ட அலைவரிசை உடைய சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. அத்துடன், ஓசோன் மண்டலத்தை தாண்டும் பொழுது, சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள், எக்ஸ்ரே, காமா போன்ற கதிர்கள், இன்ஃப்ரா ரெட் கதிர்கள் போன்றவை உறிஞ்சப்பட்டு, மீதமுள்ள ஒளிக்கற்றை பூமிக்குள் வருகிறது. எனவே, சூரிய ஒளி மஞ்சள் நிறமாகத் தெரிகிறது.
அதே சமயத்தில், விண்வெளியில், அனைத்து நிறங்களின் கூட்டாக சூரிய ஒளி தெரியும். ஆனால், மனிதர்களின் கண்களுக்கு ஒளியில் உள்ள நிறத்தை பிரித்தறியும் திறன் இல்லாததால், அனைத்து நிறங்களும் ஒன்றிணைந்து, வெள்ளை நிறமாகத் தெரியும். எனவே, விண்வெளியில் வெள்ளை நிறமாகவும் பூமியில் மஞ்சள் நிறமாகவும் சூரியன் காட்சியளிக்கும். இந்த அறிவியல் உண்மை, தற்போது, ஸ்காட் கெல்லியின் ட்விட்டர் பதிவு மூலமாக பிரபலமாகியுள்ளது.