2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவித்து வருகின்றன. இப்போது வரை 570 தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 160000 ஊழியர்கள் வரை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பாவில், ஊழியர்களை நீக்குவதில் நிறுவனங்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளில், பணியாளர் நலன் குழுக்களுடன் கலந்துரையாடாமல் ஊழியர்களை நீக்க முடியாது. ஆனால், இந்த செயல்முறைகளுக்கு அதிக கால அவகாசம் தேவை. இந்நிலையில், கூகுள் நிறுவனம், பணியாளர் நலன் குழுவுடன் பணி நீக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில், விருப்பத்துடன் பணியில் இருந்து விலகுபவர்களுக்கு, ஒரு வருட சம்பளத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் 500 பேரையும், டப்ளினில் 200 பேரையும் நீக்க கூகுள் திட்டமிட்டு வருவதால், இழப்பீட்டுத் தொகையை குறைப்பதற்கு பணியாளர் நல சங்கங்களுடன் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதே போன்ற பேச்சுவார்த்தையில் அமேசான் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.