2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கணினிகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகள் விற்பனையில் 40.5% சரிவு காணப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படாமல் தேங்கியுள்ள கணினிகளின் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் போது, அதிகமான மக்கள், வீட்டில் இருந்தே பணி செய்ய தொடங்கியதால், கணினிகள் விற்பனை உயர்ந்தது. ஆனால், அதைத் தொடர்ந்த நிகழாண்டில், விற்பனை சரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மட்டுமில்லாமல் அனைத்து கணினி தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையும் 29% சரிவடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த காலாண்டில், மொத்தம் 56.9 மில்லியன் என்ற எண்ணிகையில் கணினிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2019 ஆம் ஆண்டின் விற்பனையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். தனிப்பட்ட நிறுவனங்களை பொறுத்தவரை, லெனோவோ மற்றும் டெல் ஆகிய நிறுவனங்கள் 30% க்கும் அதிகமான விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளன. ஹெச்பி நிறுவனம் 24.2% சரிவை பதிவு செய்துள்ளது. Asustek நிறுவனம் 30.3% சரிவை பதிவு செய்துள்ளது.