உச்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான 20 சதவீதம் மின்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் காலை, மாலை வேளைகளில் 6 முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மின் தேவை அதிகம் உள்ள இத்தகைய நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.
இந்த மின் கட்டண உயர்வை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மத்திய அரசுஅறிவித்துள்ள 20 சதவீத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.














